இந்தியா

மோடி அரசை ஆர்எஸ்எஸ் கைவிட்டு விட்டது: மாயாவதி

DIN

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, மூழ்கும் கப்பல். மோடி அரசை, ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைவிட்டு விட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அருகில் சென்றால், அவர் தனது மனைவியை கைவிட்டுவிட்டது போல தங்களையும் தங்களது கணவர் கைவிட்டு விடுவார் என்று பாஜகவை சேர்ந்த பெண்கள் அச்சப்படுவதாக மாயாவதி திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இதையடுத்து, பிரதமரை தனிப்பட்ட வகையில் மாயாவதி விமர்சிப்பதாகவும், இதனால் அவர் பொது வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் என்றும் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் மாயாவதி செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சேவகன், தலைமை சேவகன், தேநீர் விற்பனையாளர், காவலாளி ஆகிய கதாபாத்திரங்களில், நமது நாடு ஏராளமான தலைவர்களை பார்த்து விட்டது. நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதுதான், இவர்களது நோக்கம் ஆகும்.
ஆனால், நாட்டுக்கு தற்போது  அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சி செய்யக் கூடிய உண்மையான பிரதமர்தான் தேவைப்படுகிறார்.
இரட்டை கதாபாத்திரத்தால், நாட்டு மக்கள் ஏற்கெனவே முட்டாளாக்கப்பட்டு விட்டனர். இதற்கு மேலும் அவர்களை முட்டாளாக்க முடியாது. மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசானது, மூழ்கும் கப்பலாகும். இது அனைவருக்கும் நன்கு தெரியும்.
மோடியின் அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பும் தற்போது கைவிட்டு விட்டது. பாஜகவின் வெற்றிக்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் யாரும் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வதை நான் இதுவரை காணவில்லை. மக்களிடையே நிலவும் அதிருப்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவையே இதற்கு காரணமாகும்.
தேர்தல் பிரசாரத்தின்போது கோயில்களுக்கு அரசியல்வாதிகள் செல்வது வாடிக்கையாகி விட்டது. இதை தேர்தல் ஆணையம் தமது கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல், தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட தலைவர்கள் சிலரும், கோயில்களுக்கு செல்கிறார்கள். அதுதொடர்பான செய்தியும் மிகப்பெரிதாக பிரசுரிக்கப்படுகிறது. இதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் (பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயில்களுக்கு சென்றதை இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டார்). இவ்வாறு அரசியல்வாதிகள் கோயில்களுக்கு செல்வதால் ஆகும் செலவு, சாலை பிரசாரத்துக்கு ஆகும் செலவு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கட்சியின் தேர்தல் பிரசார செலவாக தேர்தல் ஆணையம் கணக்கிட வேண்டும் என்றார் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT