இந்தியா

5 ஆண்டுகால தேசப்பணி: மத்திய அமைச்சர்களுக்கு மோடி, அமித் ஷா நன்றி

DIN


கடந்த 5 ஆண்டுகளாக நாட்டுக்கு சேவை புரிந்ததற்காக மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. மக்களவையின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளன.
இந்நிலையில், பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மோடியும், அமித் ஷாவும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக மட்டுமன்றி, அதன் கூட்டணி கட்சி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்பு, அனைத்து அமைச்சர்களுக்கும் அமித் ஷா சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
அரசியலுக்கு அப்பாற்பட்டது..:  மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, அதன் பின்னர் அவர்களிடையே பேசுகையில்,  இதுவரை பல தேர்தல்களை கண்டுள்ளேன். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது பல இடங்களுக்கு கட்சிக்காக பயணம் செய்துள்ளேன்; பிரசாரம் செய்துள்ளேன். ஆனால் இந்த முறை பயணம் மேற்கொண்டபோது, ஒரு யாத்திரையை மேற்கொண்ட உணர்வு ஏற்பட்டது என்றார்.
மோடி அரசுக்கு பாராட்டு..: பாஜக அரசின் 5 ஆண்டு கால ஆட்சிக்கு  அமித் ஷா  பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் நினைவுகூரத்தக்க பல சாதனைகளை மோடி தலைமையிலான அரசு நிகழ்த்தியுள்ளது. 
அவர்களது கடின உழைப்புக்கும் சாதனைகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த சாதனையை மீண்டும் ஒருமுறை மோடி தலைமையில் நாம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT