இந்தியா

புதிய எம்.பி.க்களுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள விரிவான ஏற்பாடுகள்

DIN


பதினேழாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்கள் (எம்.பி.) தில்லி வரும்போது, அவர்களுக்கான அலுவல்பூர்வ நடைமுறைகளை மேற்கொள்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகத்தின் தலைமைச் செயலர் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: 
17-ஆவது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தந்தத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான சான்றிதழ்களை வழங்குவர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பதற்காக தில்லி வரும்போது, விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அவர்களை வரவேற்கவும், அவர்கள் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கான போக்குவரத்துக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
புதிய எம்.பி.க்கள் தங்குவதற்கு தில்லியில் மக்களவைச் செயலகத்தின் வெஸ்டர்ன் கோர்ட் விடுதியிலும், அந்தந்த மாநில அரசு விருந்தினர் இல்லங்களிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி வரும் எம்.பி.க்களுக்கு உதவ பிரத்யேக ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
புதிய மக்களவை உறுப்பினர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி, தொலைபேசி வசதிகள் மற்றும் அவர்களின் இதர ஆரம்ப கட்டத் தேவைகளுக்காக மக்களவைச் செயலகம் மூலம் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அனைத்து மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மக்களவையில் உறுப்பினர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கும் மக்களவைச் செயலகத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, பல்வேறு படிவங்கள் உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
எம்.பி.க்களுக்கு அளிப்பதற்கான அனைத்து ஆவணங்களும் பகுதி 1 மற்றும் பகுதி 2 என பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்களுடைய பதிவை இணையதளம் மூலமும் மேற்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 
8 முதல் 10 தொகுதிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரி என்ற  அடிப்படையில் 56 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உரிய நடைமுறைகள் குறித்து புதிய உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பார்கள்.  வெவ்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து தில்லி வரும் புதிய உறுப்பினர்களை வரவேற்பதற்காக விமான நிலையம், ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மையங்கள் வியாழக்கிழமை (மே 23) முதல் மே 28-ஆம் தேதி வரை செயல்படும். 
உறுப்பினர் பதிவு, ஊதியம்,  படிகள், வேட்புமனுக்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட நடைமுறைகள் ஒரே இடத்தில் செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். 
பேட்டியின்போது மக்களவையின் இணைச் செயலர் ரிம்ஜிம் பிரசாத், கூடுதல் செயலர் கல்பனா சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT