இந்தியா

பாகிஸ்தானில் குரு நானக் அரண்மனை தகர்க்கப்பட்டது குறித்து விசாரணை: மோடியிடம் அமரீந்தர் சிங் வலியுறுத்தல்

DIN


குரு நானக் அரண்மனை தகர்க்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி நிர்ப்பந்திக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குரு நானக் அரண்மனை தகர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தும்படியும், அந்தச் சம்பவத்தில் தொடர்புடையோரை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் மோடி வற்புறுத்த வேண்டும். அத்துடன், குரு நானக் அரண்மனையை அறிவியல் ரீதியில் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், எதிர்காலத்தில் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் தொடர்பான பாரம்பரிய சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி இம்ரான் கான் தலைமையிலான அரசை மோடி வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அமரீந்தர் சிங்.
இதனிடையே, அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரு நானக் அரண்மனையானது 4 நூற்றாண்டுகள் பழைமையானது. அங்கு சீக்கிய புனித பயணிகள் அதிக எண்ணிக்கையில் சென்று வந்தனர். இந்நிலையில், அந்த அரண்மனை தகர்க்கப்பட்டது, உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்களின் உணர்வுகளை வெகுவாக காயப்படுத்தியுள்ளது. ஆகையால் குரு நானக் அரண்மனையை புதுப்பிக்க பாகிஸ்தானிடம் மத்திய அரசு அனுமதி பெற்றுத் தந்தால், அதை புதுப்பித்து தர பஞ்சாப் அரசு தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹர்சிம்ரத் கௌரும், குரு நானக் அரண்மனை  தகர்ப்பு சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு மோடி கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குரு நானக் அரண்மனை, 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். அந்த அரண்மனையின் 4 பக்க சுவர்களிலும் குரு நானக் படங்களும், ஹிந்து ஆட்சியாளர்களின் படங்களும் உள்ளன.
இந்த அரண்மனையின் சில பகுதிகளை உள்ளூர்வாசிகள் தகர்த்துள்ளனர். மேலும் அரண்மனையின் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT