இந்தியா

கடன் பிரச்னையால் தற்கொலை: விவசாயி குடும்பத்துக்கு உதவுமாறு கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்

DIN


கேரளத்தில் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு மாநில முதல்வர் பினராயி விஜயனை, காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அவர் கோரியுள்ளார். 
வயநாட்டைச் சேர்ந்த வி.டி. தினேஷ் குமார் (53) என்ற அந்த விவசாயி 3 வங்கிகளில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நெருக்கடி காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸார் கடந்த மாதம் 25-ஆம் தேதி கூறியிருந்தனர். 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, வயநாடு எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி மே 28-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: 
விவசாயி தற்கொலை சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு கேரள அரசு நிதியுதவி வழங்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் வேண்டும். 
ஏனெனில், இது ஒரு விவசாயியின் தற்கொலை சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. 
வயநாட்டில் இதுபோல பல விவசாயிகள் தங்களது கடன் தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல், நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயக் கடன்களை இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் காலம் தாழ்த்தி திருப்பிச் செலுத்தலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளபோதிலும், கடனை வசூலிக்கும் முகவர்களால் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 
கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், கடன் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பது முக்கியமாகும். கேரள விவசாயிகளுக்கு அத்தகைய தீர்வு கிடைக்கவும், அவர்கள் கெளரவத்துடன் வாழவும் மாநில அரசு கண்டறியும் வழிமுறைகளுக்கு எனது முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார். 
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, தொகுதி சார்ந்து மேற்கொண்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT