உத்தரப் பிரதேசத்தில் வயல்களில் உள்ள எஞ்சிய பயிர்களை எரித்தற்காக விவசாயிகள் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் உள்ள எஞ்சிய பயிர்கள், சுள்ளிக் கட்டைகளை எரித்துள்ளனர். இவ்வாறு எரிப்பதால் காற்று மாசுபடுகிறது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதற்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. தடையை மீறி பயிர்களை எரித்ததால் விவசாயிகள் 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பில்சாண்டா, நெரியா, அமரியா, புரான்பூர், செராமாவ், மாதோதண்டா, ஜஹானாபாத், பிசல்பூர் மற்றும் கஜ்ராலா உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மீது வருவாய் அதிகாரிகள் இந்த வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏற்கனவே கரும்பு நிலுவைத் தொகை செலுத்தாதது, நெல் விலை குறைவாக இருப்பது, உரங்களின் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது பயிர்களை எரித்ததற்காக வழக்குப்பதிவு செய்து விவசாயிகளை அரசு மேலும் துன்புறுத்துவதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வயல்வெளிகளில் உள்ள தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.