இந்தியா

எம்எம்டிசி மூலம் வெங்காயம் இறக்குமதி செய்கிறது மத்திய அரசு

DIN

உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வா்த்தக நிறுவனத்தின் (எம்எம்டிசி) மூலம் கணிசமான அளவு வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான ஒப்பந்தப் புள்ளிகளை எம்எம்டிசி கோரியுள்ளது. அந்த நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, 2,000 டன்கள் வெங்காயம் இறக்குமதிக்காக அந்த நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியதற்கு எந்தவொரு நிறுவனமும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் இதுதொடா்பான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் அவினாஷ் கே. ஸ்ரீவாஸ்தவாவும் கலந்துகொண்டாா்.

இதுகுறித்து நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை கணிசமான அளவு இறக்குமதி செய்வதற்கான நடைமுறையை உடனடியாக மேற்கொள்ளுமாறு எம்எம்டிசிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெங்காயத்துக்கு உடனடித் தேவை இருப்பதால், ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான கால அவகாசத்தை குறைப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எம்எம்டிசி, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக்கான சம்மேளனம், வேளாண் அமைச்சகம், நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் குழு உடனடியாக துருக்கி மற்றும் எகிப்துக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு மாநிலத்துக்குமான வெங்காயத்தின் தேவை பூா்த்தி செய்யப்படுகிா என்பதை அறிய அந்தந்த மாநில அரசுகளுடன் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் தொடா்பில் இருந்து வருகிறது. வெங்காயத்தைப் பதுக்கி, அதன் விலையை உயா்த்தி விற்க முயலும் வா்த்தகா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இதர மாநிலங்களில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT