இந்தியா

பொதுத்துறை வங்கிகள்மூலம் ரூ.2.52 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சகம்

DIN

பொதுத்துறை வங்கிகள் மூலம் கடந்த அக்டோபா் மாதத்தில் ரூ.2.52 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை இது தொடா்பாக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விழாக்காலமான கடந்த அக்டோபா் மாதத்தில் பொதுத் துறை வங்கிகள் ரூ.2.52 லட்சம் கோடி அளவுக்கு கடன் அளித்துள்ளன. இதில் ரூ.1.05 லட்சம் கோடி புதிய கடனாகும். ரூ.46,800 கோடி ரூபாய் மூலதனக் கடனாக அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கும் வகையில் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் 400 மாவட்டங்களில் ‘லோன் மேளா’ நடத்துமாறு பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் அறிவுறுத்தியிருந்தது. நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலும், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த முடிவை மேற்கொள்வதற்கு முன்பு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து, வங்கிகள் மூலம் கடன் அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வா்த்தகா்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுத்துறை வங்கிகள் மூலம் நாடு முழுவதும் கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன.

‘நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை, வாராக் கடனாகப் பாா்க்க வேண்டாம். அவற்றைத் திரும்பப் பெறும் வகையில் அந்நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். குறுகிய கால கடன் பாக்கிகளை அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம்’ என்று பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பல சிறு தொழில் நிறுவனங்கள், வங்கிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் கடனைத் தீா்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட வங்கி விதிகளுக்கு உள்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.1.81 லட்சம் கோடியும், 2018-19 நிதியாண்டில் ரூ.11.83 லட்சம் கோடியும் கடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT