நான் தேசியவாத காங்கிரஸில் தான் இருக்கிறேன்: அஜித் பவார் விளக்கம்
மகாராஷ்டிர அரசியலில் பாஜக-வுக்கு ஆதரவளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் பவார், தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக புதன்கிழமை விளக்கமளித்தார்.
மகாராஷ்டிர அரசியலில் பாஜக-வுக்கு ஆதரவளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் பவார், தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக புதன்கிழமை விளக்கமளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக யார் கூறினார்கள்? அன்றும், இன்றும், என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எனவே, தேவையற்ற குழப்பங்களை யாரும் ஏற்படுத்த வேண்டாம். எனது நிலைப்பாடு குறித்து தற்போதைக்கு எதுவும் கூற விரும்பவில்லை, இருப்பினும் சரியான நேரத்தில் எனது கருத்தை தெரிவிப்பேன் என்றார்.
மேலும், சரத் பவார் என்னுடைய தலைவர். எனவே எனது தலைவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் உரிமை எனக்கு உள்ளது என்று துணை முதல்வர் பதவியில் இருந்து விலகிய உடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்று சந்தித்தது குறித்தும் விளக்கமளித்தார்.
முன்னதாக, மகாராஷ்டிர எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேரவைக்கு வருகை தந்த அனைவரையும் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே உற்சாகத்துடன் வரவேற்றார்.
இந்நிலையில், அனைவரின் பார்வையும் அஜித் பவார் வருகையை எதிர்நோக்கி இருந்தது. அப்போது அங்கு வந்த அஜித் பவாரை ஆரத்தழுவி வரவேற்றார் சுப்ரியா சுலே. இதையடுத்து பேரவையில் அஜித் பவார், எம்எல்ஏ-வாக பதவியேற்றபோது என்சிபி உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாக மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.