இந்தியா

காஷ்மீரில் 72 நாட்களுக்கு பிறகு வழங்கப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவை மீண்டும் நிறுத்தம்!

Muthumari

ஜம்மு-காஷ்மீரில் 72 நாட்களுக்குப் பிறகு  போஸ்ட்-பெய்டு மொபைல் சேவை வழங்கப்பட்ட சிறிது நேரத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக குறுந்தகவல் அனுப்பும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் செல்லிடப்பேசி, இணைதள சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறியது.

அதனடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 40 லட்சம் போஸ்ட் -பெய்டு செல்லிடப்பேசி சேவைகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. எனினும், இணையதள சேவைகள் வழங்கப்படவில்லை. இதன்மூலம் மக்கள் அழைப்புகளை விடுக்கவும்,  குறுந்தகவல் அனுப்பவும் மட்டுமே முடிந்தது. 'ஃப்ரீ- பெய்டு' சேவை அடுத்த மாதம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.  

இந்த நிலையில், நேற்று பிற்பகல் செல்லிடப்பேசி சேவை வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் குறுந்தகவல் அனுப்பும் வசதி நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக, பாதுகாப்பு கருதி போஸ்ட்- பெய்டு சேவைகளில் குறுந்தகவல் அனுப்பும் வசதி மட்டும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று காரணம் தெரிவிக்கப்பட்டது. இது காஷ்மீர் மக்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாகவும், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாலும், தாற்காலிகமாக  குறுந்தகவல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முழுவதுமாக  ஜம்மு காஷ்மீரில் செல்லிடப்பேசி சேவைகள் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT