அசாம் மாநிலத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு அரசாங்க வேலைகள் வழங்க பரிசீலிக்கப்பட மாட்டாது என்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி 'அசாமின் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் கொள்கை' மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இந்த விதிமுறை வருகிற ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. மக்கள்தொகை சரிபார்க்கும் நோக்கில் இந்தக் கொள்கை 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு கொண்டுவர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
மேலும், 2013ன் கணக்கெடுப்பின்படி, அசாம் மாநிலத்தில் தாய் இறப்பு விகிதமும், குழந்தை இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. இதுதவிர 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதத்திலும் (1,000 குழந்தைகளுக்கு 73 பேர் இறப்பு) அசாம் முதலிடத்தில் உள்ளது.
இதுதவிர, அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனாலும் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு அதிகரிக்கிறது. எனவே, இதனை சரிசெய்யும் நோக்கிலே குடும்ப விதிமுறைகள் குறித்த இந்தக் கொள்கை நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் மாநில அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கும் புதிய நிலக்கொள்கையையும் மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.