காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பழ உற்பத்தியாளர்களை அச்சுறுத்தபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரித்தார்.
ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்கான திட்டத்தை ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: பழ உற்பத்தியாளர்களை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு நாங்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குவோம். 2 வயது குழந்தை மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாது.
ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களுக்காக அவர்களுக்கு அதிகபட்ச விலை அளிக்கப்படும். இதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பழ உற்பத்தியை நம்பி ஜம்மு-காஷ்மீரில் 7 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்பெறுகின்றன. தோட்டப் பயிர்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. இத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற காரணமாக இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி என்று சத்யபால் மாலிக் தெரிவித்தார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் சோபோரில் கடந்த சனிக்கிழமை பழ வியாபாரியின் இல்லத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 வயது குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.