இந்தியா

முசாஃபர்பூர் காப்பக வழக்கு: 8 சிறுமிகள் குடும்பத்துடன் சேர உச்சநீதிமன்றம் அனுமதி

DIN


பிகார் மாநிலம், முசாஃபர்பூர் காப்பகத்தைச் சேர்ந்த 44 சிறுமிகளில் 8 பேரை மீண்டும் அவர்களது குடும்பத்துடன் சேர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. 
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகெளடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 
அப்போது, அந்த 8 சிறுமிகளையும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கு உரிய அனுமதியை வழங்குமாறு பிகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டதுடன், அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் நிதியுதவிகள் வழங்குமாறும் நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது. 
அத்துடன், காப்பக சிறுமிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டினை மதிப்பிடுமாறும், அதுதொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 
மேலும், முசாஃபர்பூர் காப்பகத்தில் உள்ள எஞ்சிய சிறுமிகள் தொடர்பான நிலவர அறிக்கையை தயாரித்து, 8 வாரங்களுக்குள் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு டாடா சமூக அறிவியல் ஆய்வுப் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 
முன்னதாக, மேற்குறிப்பிட்ட 8 சிறுமிகள் தொடர்பாக அவர்களிடமும், அவர்கள் குடும்பத்தினரிடமும் இந்தப் பல்கலைக்கழகம் கள ஆய்வு மேற்கொண்டு தனது அறிக்கையை சீலிட்ட உறைக்குள் வைத்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. 
8 சிறுமிகளும் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படுவதற்கு தகுதியான நிலையில் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த 8 சிறுமிகளை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்துவைக்க உச்சநீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. 
முசாஃபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வந்த காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், டாடா சமூக அறிவியல் ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்தது. 
இதில் அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரஜேஷ் தாக்குர் உள்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT