இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு நீட்டிப்பு

DIN


கருப்புப் பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் அமலாக்கத் துறை காவலை, வரும் 17-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்குப் பிறகு கடந்த 3-ஆம் தேதி சிவகுமாரைக் கைது செய்தனர். பின்னர், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 9 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

அமலாக்கத் துறையின் காவல் நிறைவடைந்த நிலையில், தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் சிவகுமார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.என்.நட்ராஜ் முன்வைத்த வாதம்:

சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளது; ரூ.800 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் உள்ளன. இதுதொடர்பான பல முக்கிய விவரங்கள் சிவகுமாருக்கு மட்டுமே தெரியும். ஆனால், விசாரணையின்போது மழுப்பலாக அவர் பதிலளிக்கிறார். அதுமட்டுமன்றி, இந்த விவகாரம் தொடர்பாக கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

எனவே, அவரது காவலை 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கே.என்.நட்ராஜ் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அவரது கோரிக்கைக்கு சிவகுமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் முன்வைத்த வாதம்:

கடந்த 10 நாள்களாக அமலாக்கத் துறை காவலில் இருக்கும் சிவகுமாரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உயர் ரத்த அழுத்த தொந்தரவால் அவர் அவதிப்பட்டு வருகிறார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. மேலும், அவரது ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை இன்னும் பதிலளிக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத அமலாக்கத் துறையின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
வெகுநேரம் நீடித்த வாதத்தின்போது, இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சிவகுமாரின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு, அதாவது வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதலில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்; பிறகுதான் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும்.
சிவகுமாரை அவரது குடும்பத்தினர், வழக்குரைஞர்கள் நாளொன்றுக்கு அரை மணி நேரம் சந்திக்கலாம். மேலும், சிவகுமார் தனது மருத்துவர் ரங்கநாதனைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT