இந்தியா

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த பிரதமர் மோடி கோரவில்லை: மலேசியப் பிரதமர் கருத்தால் சர்ச்சை

DIN


இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மும்பையில் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பை நடத்தி வந்த ஜாகிர் நாயக் மீது கருப்புப் பண மோசடி, வெறுப்பூட்டும் பேச்சு மூலம் தீவிரவாதத்தைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைக்கு அஞ்சி, அவர் இந்தியாவைவிட்டுத் தப்பியோடி, மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு அந்நாட்டு அரசு நிரந்தரமாகத் தங்கியிருக்கும் உரிமை வழங்கியுள்ளது.
அவரைத் தேடப்படும் நபராக இந்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தது. அவரை நாடு கடத்தும் இந்தியாவின் கோரிக்கையை மலேசிய அரசு கடந்த ஆண்டு நிராகரித்தது. இந்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றபோது, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக மகாதிர் முகமதிடம் பிரதமர் மோடி பேசியதாக வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மலேசிய வானொலி ஒன்றுக்கு பிரதமர் மகாதிர் முகமது செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். அப்போது, ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளனவா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

பெரும்பாலான நாடுகள் அவரை நாடு கடத்த விருப்பம் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசினேன். அப்போது, ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு அவர் கோரிக்கை விடுக்கவில்லை. அவரை ஏதாவதொரு நாட்டுக்கு அனுப்ப முயன்று வருகிறோம். ஆனால், தற்போதுவரை எந்த நாடும் அவரை நாடு கடத்த விருப்பம் தெரிவிக்கவில்லை.

உரிமை இல்லை:  ஜாகிர் நாயக் மலேசிய நாட்டின் குடிமகன் இல்லை. அவருக்குத் தங்கியிருக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக நாட்டின் கலாசாரம் குறித்தும், அரசியல் குறித்தும் விமர்சிக்கும் உரிமை அவருக்குக் கிடையாது. தற்போதைய நிலையில், பொதுவெளியில் பேச அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார் மகாதிர் முகமது.
மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாகிர் நாயக், அங்கு வசிக்கும் சீனர்களுக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவர் உரை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அந்த நாட்டில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதனை மறுத்துள்ளார். 
ஜாகிர் நாயக்கின் நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT