உத்தவ் தாக்கரேவும் முதல்வர் ஃபட்னவீஸும் கூட்டணி தொடர்வதில் உறுதியாக உள்ளனர்
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவும் உறுதியாக இருப்பதாக
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள மாநிலத்தை ஆளும் பாஜகவும், சிவசேனையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும், சிவசேனையை விட அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரௌத், மும்பையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தொகுதிப் பங்கீடு தொடர்பாக உத்தவ் தாக்கரேவுக்கும், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.
மொத்தமுள்ள 288 இடங்களில் பாதி அளவான 144 இடங்கள் சிவசேனைக்கு ஒதுக்கப்படாவிட்டால் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று எங்கள் கட்சியைச் சேர்ந்த திவாகர் ராவ்தே கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அவர் தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை. இது கூட்டணியின் நிலைப்பாடுதான். சட்டப் பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் சரிபாதி இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்பது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.
நாணார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கு புத்துயிரூட்டுவது பற்றி முதல்வர் ஃபட்னவீஸ் பேசியிருப்பது பற்றிக் கேட்கிறீர்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சிவசேனை எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனினும், எங்கள் கட்சிக்கு எதிராக முதல்வர் எதுவும் கூறவில்லை. நாணார் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஃபட்னவீஸ் யாத்திரை மேற்கொள்ளவில்லை. நாணார் திட்டமோ, ஆரே காலனியில் மரங்களை வெட்டும் அரசின் முடிவோ பாஜகவுடனான எங்கள் கூட்டணிக்கு ஒரு தடையாக இருக்காது.
முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, பாஜகவில் இணைவார் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பல், சிவசேனைக்கு மீண்டும் வருவார் என்றும் ஊகங்கள் உலா வருவது பற்றிக் கேட்கிறீர்கள். அது பற்றி எங்களுக்குத் தெரியாது. பாஜக என்பது தனிக் கட்சி. தாங்கள் விரும்பும் யாரையும் அவர்கள் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் என்றார் சஞ்சய் ரௌத்.
இதனிடையே, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான கிரீஷ் மகாஜன் கூறுகையில், முதல்வர் ஃபட்னவீஸ் தனது பிரசார யாத்திரையில் மும்முரமாக இருப்பதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சற்று தாமதம் ஏற்பட்டது. அவரது யாத்திரை முடிவடைந்ததும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரமாக முன்னெடுக்கப்படும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் பேச்சுவார்த்தை முடிவடையும். இரு கட்சிகளும் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையுடன் உள்ளன. அது நடந்தே தீரும் என்றார்.