இந்தியா

ராஜஸ்தானில் மூன்று பேர் பலியான விபத்து: கார் பந்தய வீரர் கௌரவ் கில் உள்பட 2 பேர் மீது வழக்கு

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கார் பந்தயத்தின்போது, ஒரு தம்பதி மற்றும் அவர்களின் மகன் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக அர்ஜுனா விருது பெற்ற கார் பந்தய வீரர் கௌரவ் கில் உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமச் சாலைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கார் பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்துக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கார் பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சாலையோரம் மோட்டார்சைக்கிளுடன் நரேந்திர குமார் என்பவரும் அவரது மனைவி புஷ்பாதேவியும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் இளைய மகன் ஜிதேந்திராவும் இருந்தார். 
அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த கார் பந்தய வீரர் கௌரவ் கில்லின் கார் அவர்கள் மீது மோதியது. பின்னால் வந்த மேலும் இரு பந்தியக் கார்களும் அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் நரேந்திரகுமார், புஷ்பாதேவி, ஜிதேந்திரா ஆகியோ மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அந்த இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், உயிரிழந்த தம்பதியின் உறவினர்களும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர்கள், இந்த விபத்தை ஏற்படுத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினர்.
எனினும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, கிராம மக்கள் சமாதானமடைந்தனர். அதன் பின் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்த தம்பதியின் மூத்த மகனான ராகுல், காவல்துறையில் புகார் அளித்தார். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விபத்து தொடர்பாகவும், அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மேலும், பார்மர் மாவட்ட ஆட்சியரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்தில் கௌரவ் கில்லும் காயமடைந்ததாக கார் பந்தய ஏற்பாட்டாளர் ஒருவர் கூறினார். அந்தக் காரில் கில்லுடன் பந்தய வழிகாட்டி ஒருவரும் இருந்தார். எனவே, கௌரவ் கில் மீதும், அவரது வழிகாட்டி மற்றும் கார் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்த ஜே.கே.டயர், மஹிந்திரா, எம்ஆர்எஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், இந்த விபத்துக்குப் பிறகு கௌரவ் கில் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
நாட்டிலேயே முதன் முறையாக அர்ஜுனா விருது பெற்ற கார் பந்தய வீரர் கௌரவ் கில் ஆவார். இந்த ஆண்டில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT