இந்தியா

சரத் பவார் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தேன்

DIN

"தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் மிகவும் வருத்தமடைந்தேன். அதனால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தேன்' என்று சரத் பவார் உறவினரும், தேசியவாத காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏவுமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவாக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அஜித் பவார், மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது, சர்க்கரை ஆலைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளித்ததாகவும், அந்த கடன் திருப்பி வசூலிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் ரூ. 25 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பாக, அஜித் பவார் மற்றும் கூட்டுறவு வங்கி முன்னாள் அதிகாரிகள் 70 பேருக்கு எதிராக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சரத் பவார் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அமலாக்கத் துறைக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக அஜித் பவார் வெள்ளிக்கிழமை திடீரென அறிவித்தார். அவரது ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அதையடுத்து மும்பையில் கட்சித் தலைவரும், உறவினருமான சரத் பவாரை அஜித் பவார் சனிக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, சரத் பவாரின் மகளும், கட்சி எம்.பி.யுமான சுப்ரியா சுலேவும் உடனிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அஜித் பவார் கூறியதாவது:

மாநில கூட்டுறவு வங்கி மோசடிக்கும், சரத் பவாருக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. எனினும், அவரது பெயரை இந்த வழக்கில் இணைத்துள்ளனர். அவரால்தான் நான் மாநில துணை முதல்வர் பதவி வரை வந்தேன். என்னை அரசியல் வாழ்க்கையில் உயர்த்தியவர் அவர். என்னால்தான் அவருக்கு இத்தகைய அவமானங்கள் ஏற்பட்டன என்று தோன்றுகிறது. அதனால் என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தேன். எனது ராஜிநாமா முடிவு, கட்சியனரை வருத்தமடையச் செய்திருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். வங்கி சார்பான முடிவுகளை அனைவரும் சேர்ந்தே எடுத்தோம். வங்கியின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.12 ஆயிரம் கோடியாக இருக்கும்போது, ரூ. 25 ஆயிரம் கோடிக்கு எவ்வாறு ஊழல் நடைபெற்றிருக்கும்? என்று அஜித் பவார் கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஜித் பவார் ராஜிநாமா செய்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்தது. தனது மருமகன் ரோஹித் பவார், சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார் என்பதால், அதிருப்தியடைந்து அஜித் பவார் ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது. 
எனினும், இந்தக் கருத்துகளை சரத் பவார் நிராகரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT