இந்தியா

இந்தியர்கள் சார்பில் வேறு யாரும் பேச வேண்டியதில்லை: இம்ரான் கானுக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

DIN


ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிகழ்த்திய உரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியக் குடிமக்கள் சார்பில் வேறு யாரும் பேசி வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 74ஆவது விவாதத்தில் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா எடுத்த நடவடிக்கையை குற்றம்சாட்டிப் பேசினார். இந்த நடவடிக்கை மூலம் இந்தியா தனது அரசியல்சாசனத்தை மீறி விட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையே போர் மூண்டால் அது உலகையே பாதிக்கும் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.

இம்ரான் பேசி முடித்த பிறகு, ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தனது பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அச்சபையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தில் முதன்மைச் செயலராக இருக்கும் விதிஷா மைத்ரா பேசியது:

இந்தச் சபையில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றின் கனம் பொருந்தியதாக இருக்கும். துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இங்கு பேசியது உலகை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து சித்தரிப்பதாக இருந்தது. எங்களையும் அவர்களையும், பணக்காரர்களையும் ஏழைகளையும், வடக்கையும் தெற்கையும், வளர்ந்த நாடுகளையும் வளரும் நாடுகளையும், முஸ்லிம்களையும் மற்றவர்களையும் பிரிப்பதாக அவரது உரை அமைந்திருந்தது. கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும் முயற்சியாகவும் வெறுப்பூட்டும் பேச்சாகவும் அது அமைந்திருந்தது. ஐ.நா. பொதுச் சபை இதுபோன்ற வசைபாடும் நிகழ்வுகளை மிக அரிதாகவே கண்டுள்ளது.

ராஜரீக உறவுகளில் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. இனப் படுகொலை, ரத்தக்களரி, இன ரீதியிலான ஆதிக்கம், துப்பாக்கியை எடுத்தல், இறுதி வரை போராடுவது போன்ற வார்த்தைகள் வரலாற்றின் இடைக்காலத்தைப் பிரதிபலிப்பவையே தவிர, 21-ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பவை அல்ல. இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திய இம்ரான் கான், வரலாறு குறித்து தனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்கு எதிராகவே கடந்த 1971-இல் நடத்திய இனப் படுகொலையையும், அதில் அந்நாட்டுத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே.நியாசியின் பங்கையும் நாம் மறக்கக் கூடாது. இதை வங்கதேசப் பிரதமர் இச்சபையில் இன்று மாலை நினைவுகூர்ந்தார். 

அணு ஆயுதப் பேரழிவு குறித்த பாகிஸ்தான் பிரதமரின் மிரட்டலானது ராஜதந்திர ரீதியிலான ஒன்றாக இல்லாமல் அபாயகரமான கொள்கையைப் பின்பற்றும் நடைமுறையாக உள்ளது. பயங்கரவாத சங்கிலித் தொடர் தொழிலை ஏகபோகமாக நடத்தி வரும் நாட்டின் தலைவராக இருந்தாலும், பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்தை நியாயப்படுத்திப் பேசியது வெட்கமற்றதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும் இருந்தது.

காஷ்மீர் மக்கள் சார்பில் பேசுவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்தியக் குடிமக்களுக்கு தங்கள் சார்பில் பேசுவதற்கு யாரும் தேவைப்படவில்லை. அதிலும் குறிப்பாக, வெறுப்பூட்டும் சிந்தனை மூலம் பயங்கரவாதத் தொழிலைக் கட்டமைத்தவர்கள் இந்தியர்களுக்காக பேச வேண்டிய அவசியமில்லை.

பயங்கரவாதத்தையும், வெறுப்பூட்டும் பேச்சையும் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றியுள்ள பாகிஸ்தான் தற்போது மனித உரிமைக் காவலர் போல் தன்னை காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் இல்லை என்பதை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் இம்ரான் கான் தனது உரையில் குறிப்பிட்டார். 

அதற்கு முன் பாகிஸ்தான் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதியான ஒஸாமா பின்லேடனுக்கு வெளிப்படையாக ஆதரவு தந்தது பாகிஸ்தான் என்பதை நியூயார்க் நகரிடம் இம்ரான் கானால் மறுக்க முடியுமா? ஐ.நா.வால் பயங்கரவாதிகளால் அறிவிக்கப்பட்ட 130 பேருக்கும், ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட 25 பயங்கரவாத அமைப்புகளுக்கும் தாயகம் பாகிஸ்தான் என்பதை அந்நாட்டால் உறுதிப்படுத்த முடியுமா? ஐ.நா. தனது "அல்-காய்தா மற்றும் ஐ.எஸ். தடைப் பட்டியலில்' வைத்துள்ள ஒரு நபருக்கு ஓய்வூதியம் அளித்து வரும் ஒரே அரசு தங்கள் நாட்டு அரசுதான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளுமா?

பாகிஸ்தானின் மக்கள்தொகையில் கடந்த 1947-இல் 23 சதவீதமாத சிறுபான்மையினர் இருந்தனர்.

அச்சமூகத்தை 3 சதவீதமாக சுருங்க வைத்த நாடான பாகிஸ்தான், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், அஹமதியாக்கள், ஹிந்துக்கள், ஷியாக்கள், சிந்திக்கள் உள்ளிட்டோரை கொடுமைகளுக்கும், கட்டாய மதமாற்றங்களுக்கும் ஆளாக்கியுள்ளது. தனது கொடிய சட்டங்கள் மூலம் அவர்களை பாகிஸ்தான் துன்புறுத்துகிறது என்று விதிஷா மைத்ரா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

SCROLL FOR NEXT