இந்தியா

370-ஆவது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள்: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தது உச்சநீதிமன்றம்

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அமைத்தது. இந்த மனுக்கள் மீது வரும் 1-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறவிருக்கிறது.

நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்க வழிவகை செய்யும் உத்தரவுகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்துக்கும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதனடிப்படையில், அடுத்த மாதம் 31-ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.க்களான முகமது அக்பர் லோன் (ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை முன்னாள் தலைவர்), ஹஸ்னைன் மசூதி (ஓய்வுபெற்ற நீதிபதி) , கடந்த 2010-11ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான அரசின் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ராதா குமார், வழக்குரைஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோர், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதேபோல், முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள் அனைத்தையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. 

தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும் வகையில் குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். இந்த உத்தரவையும், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் ஆட்சி என்ற பெயரில், மிகவும் தனித்துவமான கூட்டாட்சி நடைமுறையை மத்திய அரசு சீர்குலைத்திருக்கிறதா? என்று உச்சநீதிமன்றம் ஆராய வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT