இந்தியா

காஷ்மீரில் 3 ஹிஸ்புல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி, பாஜக மூத்த தலைவர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி கொலை வழக்குகளில் தேடப்பட்டவர் ஆவார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

இதுதொடர்பாக, ஜம்முவில் ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது:

ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த ஒரு தனியார் வாகனத்தை, சந்தேகத்துக்கிடமான சிலர்  நிறுத்த முயன்றனர். எனினும், வாகனத்தை நிறுத்தாத அதன் ஓட்டுநர், அருகேயுள்ள ராணுவ சோதனைச் சாவடிக்கு சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ராணுவத்தின் துரித நடவடிக்கைக் குழுவினர், பாட்தே என்ற இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பயங்கரவாதிகளை சுற்றிவளைப்பதற்காக, சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வரவழைக்கப்பட்டனர். இதனால், வேறெங்கும் தப்பியோட முடியாமல், ஒரு வீட்டுக்குள் பயங்கரவாதிகள்  பதுங்கிக்கொண்டனர். இதையடுத்து, அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.

மொத்தம் 3 பயங்கரவாதிகள் வீட்டுக்குள் பதுங்கியிருந்தனர். வீட்டின் உரிமையாளர் தவிர, அவரது குடும்பத்தினர் அனைவரும் தப்பித்து வெளியே வந்துவிட்டனர். வீட்டின் உரிமையாளர் மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டார். வீட்டுக்குள் இருந்தபடி, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. 

இதனிடையே, தங்களிடம் சரணடையுமாறு, பயங்கரவாதிகளுக்கு ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். வீட்டின் உரிமையாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். இவர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் ஆவார்.

பயங்கரவாதிகள் அடையாளம் தெரிந்தது: கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஒசாமா, அவரது கூட்டாளிகளான ஜாஹித், ஃபரூக் என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

பாஜக மூத்த தலைவர் அனில் பரிஹார், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி சந்திரகாந்த் சர்மா ஆகியோர் கடந்த 2018-இல் கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதி ஒசாமா தேடப்பட்டு வந்தார். கிஷ்த்வாரில் பாதுகாப்புப் படையினரிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்ட சம்பவங்களிலும் அவருக்கு தொடர்புள்ளது என்றார் தேவேந்தர் ஆனந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT