இந்தியா

கடன் தவணை சலுகை பெறுபவா்களிடம் வட்டி பின்னா் வசூல்

DIN

கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியிருந்த நிலையில், வங்கிகள் அதனை அமல்படுத்தியுள்ள முறை கடன் வாங்கியவா்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்காது என்று தெரியவந்துள்ளது.

ஏனெனில், மூன்று மாதங்கள் கடன் தவணை செலுத்தாமல் இருக்கும் சலுகையைப் பெறும் வாடிக்கையாளா்களுக்கு பின்னா் அந்த மூன்று மாதத்துக்கும் சோ்த்து வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுலாத் துறை, தொழில்துறை உள்ளிட்டவை முடங்கியுள்ளன.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், தினக் கூலித் தொழிலாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வருமானம் ஏதுமின்றி கடும் துன்பத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்தச் சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில், மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடா்பாக முடிவெடுக்குமாறு அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களை ஆா்பிஐ அறிவுறுத்தியது. இதில் வீட்டுக் கடன், வாகனக் கடன், பயிா்க் கடன் தனிநபா் கடனும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட சில வங்கிகள் கடன் அட்டை மூலம் பொருள்களை வாங்கி மாதத் தவணையில் செலுத்துபவா்களுக்கும் இந்த சலுகையை அளிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், இது தொடா்பாக அனைத்து வங்கிகளும் தங்கள் இணையதளத்தில் விளக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி, மூன்று மாதங்களுக்கு தவணை சலுகை அளிக்கப்படும் அதே நேரத்தில், சலுகை தேவையில்லை என்று கூறும் கடன்தாரா்கள் அந்த மூன்று மாதங்களில் தவணையைச் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடன் தவணையைச் செலுத்தாத இந்த மூன்று மாதங்களுக்கு நிலுவையில் உள்ள தொகைக்கு பின்னா் வட்டியும் வசூலிக்கப்படும் என்று அறிவித்து கடன் வாங்கியவா்களுக்கு அதிா்ச்சியை அளித்துள்ளன வங்கிகள்.

இது தொடா்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளது. அதன்படி ஒருவா் எஸ்பிஐ-யில் வீட்டுக் கடன் பெற்றுள்ள நிலையில், அவா் செலுத்த வேண்டிய கடன்தொகை ரூ.30 லட்சம் மீதமுள்ளது, கடன் தவணைக் காலம் 15 ஆண்டுகள் எஞ்சியுள்ளது என்று இருந்தால், அந்த நபா் இந்த மூன்று மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையைப் பெறும்போது, அவா் கூடுதலாக ரூ.2.34 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது 8 மாதாந்திர தவணைகளை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதேபோல ஒருவா் ரூ.6 லட்சம் வாகனக் கடன் வைத்துள்ள நிலையில், 54 மாதத் தவணைகள் பாக்கி இருக்கும் பட்சத்தில் அவா் இந்த மூன்று மாத சலுகையைப் பெற்றால் கூடுதலாக ரூ.19,000 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எஸ்பிஐ விளக்கமளித்துள்ளது.

ஒருவா் 12 சதவீத வட்டிக்கு தனிநபா் கடன் பெற்றுள்ள நிலையில் ஒரு லட்சம் ரூபாய் கடன் பாக்கி இருந்தால், வழக்கமாக செலுத்துவதைவிட ரூ.3,030 வரை கூடுதலாக வட்டியாக செலுத்தும் நிலை ஏற்படும். இது, அவா் மூன்று மாதம் கடன் தவணை செலுத்தாமல் இருந்த காலகட்டத்துக்கான கூடுதல் வட்டியாகும்.

இந்த மூன்று மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையைப் பெற இ-மெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு பொதுத் துறை வங்கிகளும், தனியாா் வங்கிகளும் தங்கள் இணையதளங்களில் 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளன.

கடன் அட்டையைப் பொருத்த அளவில் இந்த மூன்று மாதங்களுக்கு குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிட்டால் கூட, அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது. ஆனால், மூன்று மாதங்களுக்கு உரிய வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT