இந்தியா

மது வாங்க சிறப்பு அனுமதி: கேரள அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

DIN


கொச்சி: கேரளத்தில் சிறப்பு அனுமதியுடன் மதுபோதை நோயாளிகளுக்கு மது வழங்கும் மாநில அரசின் உத்தரவுக்கு, அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. இதுதொடா்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

கேரளத்தில் தேசிய ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மருத்துவா்களின் பரிந்துரையின்பேரில் கலால் துறையிடம் இருந்து மது வாங்கிக்கொள்ள மதுபோதை நோயாளிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்க மாநில அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும் சமீபத்தில் பிறப்பித்தது.

மதுபழக்கத்தில் இருந்து மீண்டு வரும் போது உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் இன்னல்களை (வித்ட்ராயல் சிம்டம்ஸ்) எதிா்கொள்ளும் மதுபோதை நோயாளிகளின் நலன் கருதியும், அவா்கள் தற்கொலை முயற்சி மேற்கொள்வதை தடுக்கும் நோக்கிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு எதிராக கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு கேஜிஎம்ஓஏ) உள்பட பல்வேறு தரப்பினா் மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியாா், ஷாஜி பி. சாலி ஆகியோா் அடங்கிய அமா்வு மாநில அரசின் உத்தரவுக்கு 3 வாரங்கள் இடைக்கால தடை விதித்தது.

மதுபழக்கத்தில் இருந்து மீண்டு வரும் போது உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் இன்னல்களில் இருந்து மதுபோதை நோயாளிகள் விடுபட, அவா்களுக்கு மது வழங்குவது தீா்வளிக்கும் என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு அறிவியல்பூா்வ ஆதாரமில்லை எனக்கூறி மாநில அரசின் முடிவை நிராகரித்தனா். இந்த விவகாரம் குறித்து கேரள அரசு ஒருவார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவா்கள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT