முகப்பு
இந்தியா

புதுச்சேரியில் விதிகளை மீறிச் செயல்பட்ட 9,000 வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் தடை உத்தரவை மீறிச் செயல்பட்ட 9,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.அருண் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

புதுச்சேரியில் தடை உத்தரவை மீறிச் செயல்பட்ட 9,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.அருண் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவிவரும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், மக்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்கவேண்டும் என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது. 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, 

புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாகன நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றது. 

அந்தவகையில், தடையை மீறிச் செயல்பட்ட 9 ஆயிரம் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரியில் 5 பேர் கரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், புதுச்சேரியில் புலம்பெயர்ந்த 4,000 தொழிலாளர்கள் கவனிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்குத் தினமும் உணவு வழங்கப்படுவதாகவும் அருண் குறிப்பிட்டார். இதேபோல், வீடற்ற 1,200 பேருக்கு தங்குமிடம் கொடுத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் கூறுகையில், 

எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடக் கடைகளை நடத்தி வருவதாகவும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வெளிநாடுகளிலிருந்து புதுச்சேரிக்குத் திரும்பியவர்கள் தங்கள் பயண விவரங்களையும் வெளியிடுமாறு அல்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.