குஜராத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 179 ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்குப் புதிதாக நான்கு பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்குப் புதிதாக நான்கு பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி குஜராத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், பாவ்நகரில் இரண்டு, சூரத் மற்றும் வதோதராவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
கரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்ட 179 பேரில், 83 பேர் அகமதாபாத்தில் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைபெற்று வரும் 138 பேரில், இரண்டு பேருக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா பாதிப்பு காரணமாக குஜராத்தில் மொத்தம் 15 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அகமதாபாத்தில் எட்டு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 935 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 231 பேரின் முடிவுகள் இன்று எதிர்பார்க்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.