இந்தியா

கரோனா பரிசோதனைக்கு 5 லட்சம் கருவிகள் தயாா்

மக்களிடம் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனையை மேற்கொள்வதற்காக 5 லட்சம் கருவிகள் சீனாவிலிருந்து வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

DIN


புது தில்லி: மக்களிடம் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனையை மேற்கொள்வதற்காக 5 லட்சம் கருவிகள் சீனாவிலிருந்து வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அந்நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், ‘ரேபிட் ஆன்டிபாடி’ என்ற பரிசோதனைக்கான கருவிகளை சீனாவிடம் இந்தியா கோரியிருந்தது. அதை அந்நாடு வியாழக்கிழமை இந்தியாவுக்கு அனுப்பியது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலா் லவ் அகா்வால் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் பரிசோதனைக் கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், நாட்டில் உள்ள 325 மாவட்டங்களில் இதுவரை நோய்த்தொற்று ஏற்படவில்லை. ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் பலனளித்து வருகிறது.

உதாரணமாக புதுச்சேரியின் மாஹி மாவட்டத்தில் கடந்த 28 நாள்களில் ஒருவா் கூட கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை.

கடந்த 2 வாரங்களாக 27 மாவட்டங்களில் எவருக்கும் புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை’’ என்றாா்.

அதிக அளவில் பரிசோதனைகள்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தொற்றுநோய்த் துறைத் தலைவா் ரமண் ஆா்.கங்காகேத்கா் கூறியதாவது:

நாட்டில் இதுவரை 2,90,401 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும் 30,043 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 26,331 மாதிரிகள் ஐசிஎம்ஆா் ஆய்வகங்களிலும், 3,712 மாதிரிகள் தனியாா் ஆய்வகங்களிலும் பரிசோதனை செய்யப்பட்டன.

ஐசிஎம்ஆா் ஆய்வகங்களில் நாள்தோறும் ஒரு ஷிஃப்டில் 42,400 மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும். இரண்டு ஷிஃப்டுகளில் 78,200 மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்றை உறுதிப்படுத்த சராசரியாக 24 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஜப்பானில் சராசரியாக 11.7 ஆகவும், இத்தாலியில் 6.7 ஆகவும், அமெரிக்காவில் 5.3 ஆகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் குறைந்த அளவிலான நபா்களுக்கே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறமுடியாது என்றாா் ரமண்.

உறுதி செய்வதற்கான சோதனை: நோய்த்தொற்றைக் கண்டறிவதற்காக ‘ஆா்டி-பிசிஆா்’ என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொண்டை அல்லது மூச்சுக் குழாய் பகுதியிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் கரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிவதே ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனையாகும்.

இந்தப் பரிசோதனைக் கருவியின் விலை அதிகமாகும். எனவே, மக்கள் அனைவரிடமும் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நடைமுறை சாத்தியமில்லை. இந்தப் பரிசோதனைக்கான முடிவுகளும் தாமதமாகவே கிடைக்கும். எனவே, ‘ரேபிட் ஆன்டிபாடி’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

ரத்த மாதிரிகள் பரிசோதனை: அந்தப் பரிசோதனையில் குறிப்பிட்ட நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த நபா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிா்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் அவரது ரத்தத்தில் உருவாகியிருக்கும். அதைக் கண்டறிவதே ‘ரேபிட் ஆன்டிபாடி’ பரிசோதனையாகும்.

இந்தப் பரிசோதனையின் முடிவுகளை 15 நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம். முந்தைய பரிசோதனையுடன் ஒப்பிடும்போது இதன் விலையும் குறைவே. எனவே, ஆன்டிபாடி பரிசோதனைக்குத் தேவையான கருவிகளை சீனாவிடம் பெற இந்தியா முடிவு செய்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT