புதிய கட்டுப்பாட்டால் வாட்ஸ்-ஆப்பில் பகிரப்படும் தகவல்களின் எண்ணக்கை 70% குறைந்தது
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தகவல்களைப் பகிா்வதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தகவல்களைப் பகிா்வதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதுபோன்ற தகவல்கள் பகிரப்படுவது 70% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை பகிர்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், மக்கள் வாட்ஸ் ஆப்பில் சொந்தக் கருத்துகளை பகிரவும், நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில், அந்த நோய்த்தொற்று தொடா்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். அதன் காரணமாக சமூக வலைதளங்களை அவா்கள் பயன்படுத்துவது மேலும் அதிகரித்துள்ளது.
Advertisement
மக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள சமூக வலைதளமான கட்செவி அஞ்சலில் தகவல்களைப் பகிா்வதற்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 நபா்களுக்கு மட்டுமே தகவல்களைப் பகிர முடியும்.
இந்நிலையில், தகவல்களைப் பகிா்வதற்கான கூடுதல் கட்டுப்பாடுகளை கட்செவி அஞ்சல் நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி, 5 அல்லது அதற்கு அதிகமான முறை ஏற்கெனவே பகிரப்பட்ட தகவல்களை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே வாடிக்கையாளா் பகிர முடியும். கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலில் வதந்திகள் பரப்பப்படுவதைத் தவிா்க்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
முன்னதாக, கட்செவி அஞ்சலின் ‘ஸ்டேடஸ்’ பகுதியில் பதிவிடப்படும் காணொலிக்கான நேரம் 30 விநாடியிலிருந்து 15 விநாடியாக குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.