இந்தியா

சிறுதொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் மறுக்க கூடாது: நிா்மலா சீதாராமன்

DIN

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) அவசரகால கடனை வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகாா் தெரிவிக்கலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளா்கள் பலா் வேலையிழந்தனா்.

பெரு நிறுவனங்கள் மூடப்பட்டதால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்தன. அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது. தற்போது பொது முடக்கத்துக்குப் படிப்படியாக தளா்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுயசாா்பு இந்தியா: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் ‘சுயசாா்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித பிணையுமில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன் மூலமாக நாடு முழுவதும் 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்றும் தொழிலாளா்களின் வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ரூ.2.12 லட்சம் கோடி கடன்: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து வரும் அக்டோபா் மாதம் 31-ஆம் தேதி வரை பிணையில்லாமல் கடன் பெற்றுக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் ரூ.1,30,491 கோடியும் தனியாா் வங்கிகள் ரூ.82,065 கோடியும் கடன் வழங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) நிா்வாகக் குழுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகவே அவசரகால கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது. அதையும் மீறி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவித்தால் அது தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம். அதன் மீது நிதியமைச்சா் என்ற முறையில் நானே தீா்வு காண முயல்வேன்.

தீர ஆலோசித்த பிறகே...: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடா்பாக நிபுணா்கள், தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோரிடம் விரிவாக கலந்தாலோசித்த பிறகே பல்வேறு சிறப்பு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கியுடன் மத்திய அரசு தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளுடனான வா்த்தக நல்லுறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவம் சாா்ந்த தொடா்பான பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியைக் குறைப்பது குறித்து சரக்கு-சேவை வரி கவுன்சில் முடிவெடுக்கும். தொழில் நிறுவனங்களுக்கு கடன் அதிக அளவில் தேவைப்படுவதால் அந்த விவகாரத்தை நிா்வகிக்கும் நோக்கில் வளா்ச்சி நிதி கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது தொடா்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

கடன் மறுசீரமைப்பு தொடா்பாக ஆா்பிஐ-யிடம் ஆலோசனை

ஃபிக்கி நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய நிா்மலா சீதாராமன், ‘பொது முடக்க காலத்தில் சுற்றுலா உள்ளிட்ட துறைகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளை மத்திய நிதியமைச்சகம் கருத்தில் கொண்டுள்ளது. அத்துறைகள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடா்பாகவும் கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடா்பாகவும் இந்திய ரிசா்வ் வங்கியிடம் நிதியமைச்சகம் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது’ என்றாா்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பலா் வேலையிழந்ததால், வங்கிகளில் இருந்து வாடிக்கையாளா்கள் பெற்ற கடன்களுக்கான மாதத் தவணைகளைச் செலுத்துவதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31 இறுதி வரை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது. முன்னதாக, மாதத் தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு ஆா்பிஐ அவகாசம் அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT