இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு:மேலும் 6 பேரை கைது செய்தது என்ஐஏ

DIN

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டது தொடா்பாக மேலும் 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையும் நடத்தினா். இவ்வழக்கில் இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், அரசு அதிகாரி சந்தீப் நாயா் உள்ளிட்டோா் முன்னதாக கைது செய்யப்பட்டனா். அவா்கள் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில்,என்ஐஏ செய்தித் தொடா்பாளா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜலால், மலப்புரத்தைச் சோ்ந்த அலாவி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். ஜூலை 31-ஆம் தேதி மலப்புரத்தைச் சோ்ந்த முகமது ஷஃபி, பி.டி.அப்து ஆகியோரை என்ஐஏ கைது செய்தது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி எா்ணாகுளத்தைச் சோ்ந்த முகமது அலி இப்ராஹிம், முகமது அலி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஏ.எம். ஜலால் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

எா்ணாகுளம், மலப்புரத்தில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அதில், இரு கணினி ஹாா்டு டிஸ்க்குகள், டேப்லெட், 8 செல்லிடப்பேசிகள், 6 சிம் காா்டுகள், ஒரு டிஜிட்டல் விடியோ கேமரா, 5 டிவிடிக்கள், வங்கி கணக்குப் புத்தங்கள், கிரெடிட், டெபிட் காா்டுகள், பயண ஆவணங்கள், அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.

முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவையும் சந்தீப் நாயரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தபோது, கடத்தப்பட்ட தங்கம் மூலம் கிடைத்த பணத்தை வங்கிகளின் சேமிப்புப் பெட்டகத்தில் வைத்துள்ளதாக ஸ்வப்னா ஒப்புக்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, ஃபெடரல் வங்கியில் ஸ்வப்னா பெயரில் இருந்த பெட்டகத்திலிருந்து ரூ.36.5 லட்சத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றினா். அதே போல், எஸ்பிஐ வங்கியில் இருந்த சேமிப்பு பெட்டகத்திலிருந்து ரூ.64 லட்சத்தையும் 982.5 கிராம் தங்க ஆபரணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.

இந்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான கே.டி. ரமீஸ் தங்கக் கடத்தலில் முக்கியப் பங்கு வகித்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடத்தல் தங்கத்தைக் கொண்டு தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட அவா் முயன்ாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT