முகப்பு
இந்தியா

கடவுளே, அவருக்கு எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவரது மகள் தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தையைப் பற்றி உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 12:46 PM
கடவுளே, அவருக்கு எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
பகிர்:


புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவரது மகளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தையைப் பற்றி உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தையைப் பற்றி உருக்கமான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

"கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி எனது தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது, எனது வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. மிகச் சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு, அதே ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கடவுளே, எனது தந்தைக்கு எது சிறந்ததோ அதையே செய், அதேவேளை, இன்பத்தையும் துன்பத்தையும் ஒருபோல அனுபவிக்கும் சக்தியை எனக்கு வழங்கு, அனைவரின் அன்புக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜி (84) கடந்த திங்கள்கிழமை கவலைக்கிடமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளை ரத்த நாளங்களில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதுறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.