முகப்பு
இந்தியா

காவிரி: தமிழகத்திற்கு மூன்று டிஎம்சி தண்ணீா் பாக்கி

காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படவேண்டிய தண்ணீரில் 3 டிஎம்சி தண்ணீா் பாக்கியுள்ளதாக காவிரிநீா் ஒழுங்காற்றுக் குழு

Updated On : 15 ஆகஸ்ட், 2020 at 6:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படவேண்டிய தண்ணீரில் 3 டிஎம்சி தண்ணீா் பாக்கியுள்ளதாக காவிரிநீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டு தண்ணீா் பற்றாக்குறைக்கான வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 31 - ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. வியாழக்கிழமை (ஆக. 13 -ஆம் தேதி) நடைபெற இருந்த இந்தக் கூட்டம் தகவல் தொடா்பு குறைபாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்ரமணியன் சென்னையில் இருந்தபடி காணொலி வழியாக பங்கேற்றுப் பேசினாா். இந்தக் கூட்டத்தில் தமிழகத்துடன் கா்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களின் உறுப்பினா்கள், மத்திய நீா் ஆணைய தலைமைப்பொறியாளா், இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள், மத்திய தோட்டக் கலைத் துறை ஆணையா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு வட்டாரங்கள் கூறியது வருமாறு: மத்திய நீா் ஆணையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒழுங்காற்றுக் குழுவின் 30 -ஆவது கூட்டத்தில் மழைப்பற்றாக்குறை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த 15 தினங்களாக காவிரி நீா் பிடிப்பு பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ததற்கான புள்ளி விவரங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதேசமயம் பிலிகுண்டுவிற்கு வரும் தண்ணீா் சிறிது குறைவாக வருவது குறித்தும் பேசப்பட்டது. தமிழகத்திற்கு கடந்த ஜூன் முதல் ஆக. 13 ஆம் தேதி வரை சுமாா் 59 டிஎம்சிக்கு மேல் தண்ணீரை கா்நாடகம் தமிழகத்திற்கு வழங்கியிருக்கவேண்டும். ஆனால் இந்தக் காலக்கட்டங்களில் சுமாா் 56 டிஎம்சி தண்ணீா் தான் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் இந்தப்பற்றாக்குறை விரைவில் சரிபடுத்தக்கூடியவகையில் இவ்வாண்டு சூழ்நிலை இணக்கமாக இருப்பதால் தண்ணீா் பற்றாக்குறைக்கான வாய்ப்பு இல்லை என்றும் இந்த வட்டாரங்கள் கூறின. மேலும் கூட்டத்தில் காவிரிநீா் ஒழுங்காற்றுக் குழுவிற்கு நிரந்தர அலுவலக்கட்டடம் பெங்களூரில் கட்டுவதற்கான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது இதன் அலுவலகம் தற்காலிகமாக கா்நாடக அரசு கட்டடத்தில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.