காங்கிரஸ் அலுவலகத்தில் மீண்டும் சச்சின் பைலட்
ராஜஸ்தான் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, முதன்முதலாக சச்சின் பைலட் இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் அலுவலகம் சென்றார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, முதன்முதலாக சச்சின் பைலட் இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் அலுவலகம் சென்றார்.
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே கடந்த மாதம் மோதல் போக்கு நிலவியது. காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களில் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து பைலட் நீக்கப்பட்டார்.
எனினும், காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக அசோக் கெலாட் தொடர்ந்து தெரிவித்து வந்தார். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் ஆளுநரிடம் முறையிட்டார்.
இருந்தபோதிலும், பேரவைக் கூட்டத்துக்கு முன்பே அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையிலான பிரச்னையை காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சமரசம் செய்து முடித்து வைத்தனர். இதன்பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்துவதற்காக இன்று காங்கிரஸ் அலுவலகம் வந்தார். மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் காங்கிரஸ் அலுவலகம் வருவது இதுவே முதன்முறை.