மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட இரண்டு வாய்ப்புகள்: மத்திய அரசு
மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
புது தில்லி: மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை தொடங்கி 5 மணி நேரம் நடைபெற்றது.
காணொலி வழியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இச்சூழலில், இன்று கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில அரசுகள் தங்களது வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று, இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து 97,000 கோடி ரூபாயை நியாயமான வட்டி விகிதத்தில் வழங்க மாநிலங்களுக்கு ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கடன் தொகையை செஸ் வருவாயிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும்.
இரண்டாவது வாய்ப்பு, இந்த ஆண்டு ரூ.2.35 லட்சம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு வேறுபாட்டை ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விரு வாய்ப்புகளும் மாநில அரசுகளின் முன் வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறும் முறையை எளிதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை தங்களுக்கு அனுப்புமாறும், அதுபற்றி 7 நாள்களில் விரிவாக ஆலோசித்து முடிவெடுத்து தெரிவிப்பதாகவும் மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் எனறும் அவர் கூறியுள்ளார்.