குடிசைப்பகுதி மக்களுக்காக மருத்துவமனையாக மாறிய மசூதி: ஹைதராபாத்தில் நெகிழ்ச்சி
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் குடிசைப்பகுதி மக்களுக்கு சிகிச்சையளிக்க மசூதியை மருத்துவமனையாக மாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் குடிசைப்பகுதி மக்களுக்கு சிகிச்சையளிக்க மசூதியை மருத்துவமனையாக மாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் முக்கிய நகரமாக ஹைதராபாத் உள்ளது. இங்கு வசித்து வரும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போதிய மருத்துவமனை வசதியின்றி தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரநகர் பகுதியில் உள்ள மசூதி தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டு சேவையாற்றி வருகிறது.
இந்த மசூதி 31 சேரிப் பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும். மேலும் இங்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் ஒரு பொது மருத்துவர், குழந்தை நிபுணர், மகளிர் மருத்துவ நிபுணர் என பலர் பெண்கள் குழுவினரால் நிர்வகிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் அனைத்து மதத்தவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக செயல்படும் இந்த மருத்துவமனையை ஹெல்பிங் ஹேண்ட் பவுண்டேஷன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அறக்கட்டளை நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
அடிப்படை மருத்துவ சேவை முதல் ஆய்வக சோதனை வரை இந்த மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அறங்காவலர் முஜ்தாபா ஹசன் அஸ்காரி தெரிவித்துள்ளார்.
கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.