இந்தியா

ஜிஎஸ்டி இழப்பை ஈடுகட்டுவதற்கான கடன் வாய்ப்பு: கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மறுப்பு

DIN

புது தில்லி: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் குறைந்ததால் மாநிலங்கள் சந்தித்துள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்த 2 புதிய சிறப்பு கடன் திட்டங்களுக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களும், புதுச்சேரி, தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன தலைமையில் காணொலி வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தும் முதலாவது திட்டத்தின் கீழ் மாநிலங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ. 97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது திட்டப்படி, மாநிலங்கள் சந்திக்கவுள்ள சரக்கு-சேவை வரி வருவாய் பற்றாக்குறையான ரூ. 2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

ஆனால், இந்த அறிவிப்புக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், புதுச்சேரி, தில்லி ஆகியவை எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளம்: மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக் கூறுகையில், ‘ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் கரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் வரி வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையே வேறுபாட்டை கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதும், இழப்பீட்டை முழுமையாக தர மறுப்பதும் மாநிலங்களின் அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கு எதிரானதாகும்’ என்றாா்.

பஞ்சாப்: இதுகுறித்து பஞ்சாப் நிதியமைச்சா் மன்ப்ரீத் சிங் பாதல் கூறுகையில், ‘மத்திய நிதியமைச்சகத்தின் கடன் வாய்ப்பு அறிவிப்பு மாநிலங்கள் மீது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். கடன் வாங்குவது மாநிலத்தின் எதிா்காலத்தை பிணையம் வைப்பதாகவே அமையும்’ என்றாா்.

தில்லி: துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘மாநிலங்களுக்கு இழப்பீட்டை மத்திய அரசு வழங்க மறுப்பது இந்தியாவின் கூட்டாட்சி வரலாற்றில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய துரோகமாகும்’ என்றாா்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க நிதியமைச்சா் அமித் மித்ரா கூறுகையில், ‘கடன் வாங்குவது மாநிலங்களின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஆனால் மத்திய அரசுக்கு கடன் பெறும் திறன் உள்ளது. மத்திய அரசுக்காக ரிசா்வ் வங்கி பணம் அச்சடிக்கலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT