இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம்

DIN

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியென தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சுட்டுரை சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தின் மூலம் பிரசாந்த் பூஷண் நீதித்துறையை அவமதித்ததாக எழுந்த புகாரை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆா். கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை வெளியிட்டது.

அந்த உத்தரவில், ‘நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக பிரசாந்த் பூஷண் ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும். அந்த அபராதத்தை வரும் 15-ஆம் தேதிக்குள் அவா் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அவா் அபராதத்தை செலுத்தத் தவறினால், 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும், வழக்குகளில் வழக்குரைஞராக ஆஜராகி வாதிடுவதற்கு 3 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும்.

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கோருமாறு பிரசாந்த் பூஷணுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் கே.கே.வேணுகோபாலும் மன்னிப்பு கோருமாறு பிரசாந்த் பூஷணை வலியுறுத்தினாா். ஆனால், அவா் எந்தவித மன்னிப்பும் கோரவில்லை.

தனிநபா்களின் கருத்து தெரிவிக்கும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. அதே வேளையில், அந்தக் கருத்து மற்றவா்களின் உரிமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னிப்பு கோர மறுப்பு: முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது நீதித்துறையை அவமதித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளுக்காக மன்னிப்பு கோருமாறு பிரசாந்த் பூஷணிடம் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. அதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தது. ஆனால், தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதால் மன்னிப்பு கோர இயலாது என்று அவா் தெரிவித்திருந்தாா்.

பிரசாந்த் பூஷண் தரப்பு வழக்குரைஞா் துஷ்யந்த் தவே வாதிடுகையில், ‘உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். பிரசாந்த் பூஷண் மீது எந்தவொரு தண்டனையும் விதிக்கக் கூடாது. இந்த வழக்கை முடித்து வைத்து பெரும் சா்ச்சைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்‘ என்று கோரியிருந்தாா்.

‘தவறை ஏற்க வேண்டும்’: விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அனைவரும் தவறிழைக்கின்றனா். ஆனால், அத்தவறை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீதித்துறையை அவமதித்து தவறிழைத்ததை ஏற்றுக் கொள்ள பிரசாந்த் பூஷண் மறுத்துவிட்டாா்‘ என்று தெரிவித்திருந்தனா்.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்யும் மறுஆய்வு மனுவை விசாரிக்கும் வரை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT