விவசாயத் தலைவர்களுடன் அமித் ஷா சந்திப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயத் தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயத் தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார்.
மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையே நாளை 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
"அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு 8 மணிக்குத் தொடங்கியது. 13 விவசாயத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 8 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 5 பேர் நாட்டின் மற்ற விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெறும் என்று எண்ணியதாக சில விவசாயிகள்தெரிவித்தனர். ஆனால், பூசாவிலுள்ள தேசிய வேளாண் அறிவியல் கட்டடத்தில் நடைபெற்றது."
அமித் ஷாவுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படாத விவசாயத் தலைவர் ஜொகிந்தர் சிங் உக்ரஹன். இவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கையில், "அதிகாரப்பூர்வ கலந்தாலோசனைக்கு முன்பு பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை. இன்றைய கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள், பெரும் பகுதியினரை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
ஒருபுறம் நாளை 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. மறுபுறம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த நிலையில் அமித் ஷா விவசாயிகளைச் சந்தித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.