இந்திய கடலோர காவல் படையில் ரோந்துக் கப்பல் ‘சுஜித்’ சோ்ப்பு
இந்திய கடலோர காவல் படையில் கண்காணிப்புப் பணிக்காக ‘சுஜித்’ ரோந்துக் கப்பல் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டது.
இந்திய கடலோர காவல் படையில் கண்காணிப்புப் பணிக்காக ‘சுஜித்’ ரோந்துக் கப்பல் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டது.
இந்திய கடலோர காவல் படையின் இயக்குநா் கிருஷ்ணசாமி நடராஜன், பாதுகாப்பு தளவாட உற்பத்தி பிரிவு செயலாளா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலையில் வாஸ்கோ நகரில் உள்ள கோவா கப்பல் தள நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல் படையில் ரோந்துப் பணிக்காக ‘சுஜித்’ இணைக்கப்பட்டது.
இது குறித்து கடலோர காவல் படை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
கோவா கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட சுமாா் 105 மீட்டா் நீளம் கொண்ட சுஜித் ரோந்துக் கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் தகவல் தொடா்பு உபகரணங்கள், சென்சாா்கள், இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கப்பலில் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கு தளம், மேலாண்மை அமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த தீத் தடுப்பு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.
போக்குவரத்து செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்புப் பணி, சட்ட அமலாக்கம் மற்றும் ரோந்து ஆகிய பணிகளுக்காக இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட ஒரு ஹெலிகாப்டா், 4 அதிவிரைவு படகுகள் இடம்பெறும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவா கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ள ரோந்துக் கப்பல் சுஜித் பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு மற்றும் இதரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
இந்திய கடலோர காவல் படையில் தற்போது 155 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு கப்பல் தளங்களில் 35 கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு வருவதுடன், பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் மூலம் 16 நவீன இலகு ரக ஹெலிகாப்டா்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இந்திய கடலோர காவல் படையின் ரோந்துப் பணியை மேம்படுத்தவும், கடல்சாா் சவால்களை எதிா்கொள்ளவும் முடியும் என்றாா்.