மணமான மகளுக்கு தந்தையின் அரசுப் பணி மறுப்பு சட்டவிரோதம்: கர்நாடக நீதிமன்றம்
அரசு ஊழியர் இறந்தால், இழப்பீடாக அவரது மணமான மகளுக்கு அரசுப் பணி வழங்குவதை மறுக்கும் 1996 சட்டப்பிரிவுகள் சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்
பெங்களூரு: அரசு ஊழியர் இறந்தால், இழப்பீடாக அவரது மணமான மகளுக்கு அரசுப் பணி வழங்குவதை மறுக்கும் 1996 சட்டப்பிரிவுகள் சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15-ல் மதம், இனம், பாலினம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. அந்த வகையில், மணமான மகளுக்கு அரசின் இழப்பீடாக கிடைக்கும் அரசு வேலை வாய்ப்பை மறுப்பது என்பது இந்த சட்டத்துக்கு எதிரானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. பாகிஸ்தானிலிருந்து திரும்பி 5 ஆண்டுகளாகியும் பெற்றோரை தேடிக்கொண்டிருக்கும் பெண்
புவனேஸ்வரி வி. புரானிக் என்பவரது மனுவை விசாரித்த நீதிபதி எம். நாகப்பிரசன்னா, 1996 சட்டத்தின் கீழ் உள்ள சட்டப் பிரிவு 2(1)(எ)(ஐ), சட்டப்பிரிவு 2(1)(பி) மற்றும் சட்டப்பிரிவு 3(2)(ஐ)(சி) ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மணமாகாத என்ற வார்த்தையை நீக்குமாறும், இது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14 மற்றும் 15-ல் கூறப்படும் சரத்துகளுக்கு எதிரானது என்றும், மனுதாரருக்கு இழப்பீடாக வழங்கப்படும் அரசுப் பணியை ஒரு மாத காலத்துக்குள் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மரதஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் வேளாண் துறையில் செயலாளராக பணியாற்றி மறைந்த அஷோக்கின் மகளாவார். அஷோக்குக்கு மகனும் மகளும் இருக்கும் நிலையில், அரசின் இழப்பீடாக வாரிசுக்கு அரசுப் பணி வழங்கும் பணி நியமனத்தை மகன் வேண்டாம் என்று நிராகரித்துவிட்ட நிலையில், அந்த வேலையை அவரது மகள் மணமானவர் என்று கூறி, அவருக்கு வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த சட்டப்பிரிவை அப்படியே விட்டுவிட்டால், அது பாலின அடிப்படையில் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.
ஒரு மகனின் திருமண நிலை, அவனுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில், இழப்பீடு அடிப்படையில் அவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றால், அதுவே, ஒரு மகளுக்கும் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது, திருமணமாகிவிட்டால், அந்த மகள், அவரது குடும்பத்தில் ஒருவர் இல்லை என்று மறுத்துவிட முடியாது, அதே வேளையில், மணமான மகன் மட்டுமே அந்த குடும்பத்தில் உறுப்பினராக நீடிப்பார் என்பதை அனுமானிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மகன் திருமணத்துக்கு முன்பும் பின்பும் மகனாகவே நீடிக்கிறார். பெற்றோருக்கும் மகனுக்கும் உள்ள உறவை திருமணம் பாதிப்பதில்லை. அதுபோலவே பெற்றோருக்கும் மகளுக்கும் உள்ள உறவை திருமணம் எந்த வகையிலும் தடுக்காது.
மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப சட்டத்திலும் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த சட்டப்பிரிவில் மாற்றம் செய்வதற்கான உதாரணமாக இந்த வழக்கு அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.