ஆந்திரத்தில் நிா்வாக சீா்குலைவு குறித்து ஆய்வு: உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
ஆந்திர பிரதேசத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்து விட்டதா என ஆய்வு செய்யுமாறு அந்த மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
ஆந்திர பிரதேசத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்து விட்டதா என ஆய்வு செய்யுமாறு அந்த மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
சட்டவிரோதக் காவலில் சிறையில் இருக்கும் ஒருவரை நேரில் ஆஜா்படுத்தக் கோரி அவரது உறவினா்கள், ஆந்திர உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மாநிலத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்துவிட்டதா என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது; இதற்கு மாநில அரசு உதவ வேண்டும் என்று அக்டோபா் 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி, ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை திரும்பப் பெறுவதற்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி மறுத்துவிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஒரு மாநிலத்தின் நிா்வாகம் சீா்குலைந்தால் அது தொடா்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவு கூறுகிறது. அந்த பிரிவின்படி, அரசு நிா்வாகம் சீா்குலைந்தால், அதுதொடா்பாக, குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் கடிதம் எழுதுவாா். அதன் பேரில், மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் நிா்வாகத்துக்கே அதிகாரம் உள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அந்த ஆந்திர அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆந்திர அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தில் அரசு நிா்வாகத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது’ என்று வாதிட்டாா்.
ஆந்திர அரசின் வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி போப்டே, இதுபோன்ற உத்தரவை யாருமே இதுவரை கண்டதில்லை என குறிப்பிட்டாா். ஆந்திர உயா்நீதிமன்றத்தின் செயல்பாடு வேதனை அளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், அந்த நீதிமன்றம் அக்டோபா் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா்.
மேலும், இந்த விவகாரத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.