முகப்பு
இந்தியா

கேரளத்தில் கரோனா அதிகரிக்கலாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதையொட்டி கேரளத்தில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (கோப்புப்படம்)
பகிர்:

திருவனந்தபுரம்: உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதையொட்டி கேரளத்தில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரித்துள்ளார்.

மேலும் வாக்குச்சாவடி சென்று வாக்கு செலுத்திய மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கேரளத்தில் கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. மேலும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரளத்தில் பொதுமக்களுடன் முகநூல் வாயிலாக பேசிய அமைச்சர் ஷைலஜா, வாக்களிக்க வந்த பொதுமக்கள் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

குழந்தைகளுடன் கடைவீதிக்கு செல்லவோ, குழுவாக நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவோ இது உகந்த நேரமல்ல. கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் வரை பொறுமை காக்க வேண்டும்.

தடுப்பு மருந்து சந்தைக்கு வரும் வரை அரசியல் கட்சிகள், குடும்பத்தினர், தனிநபர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கேரளத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

கேரளத்தில் தேர்தல் முடிந்தது போன்று கரோனாவும் முடிந்துவிட்டதாக மக்கள் கருதக்கூடாது. அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.  

அரசால் கட்டுப்பாடுகளை மட்டுமே அதிகரிக்க முடியும். மக்கள் தான் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கரோனா பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →