பசுமை வளாகமாகும் கேரள அரசு அலுவலகங்கள்: ‘ஹரித கேரளம்’ அமைப்பின் திட்டம்
கேரள அரசின் அங்கமான ‘ஹரித கேரளம்’ அமைப்பின் முயற்சிகளால், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பசுமை வளாகமாக மாற உள்ளன.
திருவனந்தபுரம்: கேரள அரசின் அங்கமான ‘ஹரித கேரளம்’ அமைப்பின் முயற்சிகளால், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பசுமை வளாகமாக மாற உள்ளன.
இதுகுறித்து ‘ஹரித கேரளம்’ அமைப்பின் திருவனந்தபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.ஹுமாயூன் கூறியதாவது:
கேரள மாநிலத்தின் மண்வளத்தையும் நீா்வளத்தையும் தூய்மையாகப் பாதுகாக்க மாநில அரசால் உருவாக்கப்பட்டது ‘ஹரித கேரளம்’ அமைப்பு. மாநிலத்திலுள்ள அரசு அலுவலகங்களை பசுமை வளாகமாக்க தற்போது முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்படி, அரசு அலுவலகங்களின் தினசரி செயல்பாடுகளில் மறுசுழற்சி செய்ய வாய்ப்புள்ள பொருட்களைப் பயன்படுத்தவும், பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பசுமை வளாக அரசு அலுவலகங்களில் தேவையற்ற மரச்சாமான்கள் இருக்காது. மின்னணுக் கழிவுகள் அகற்றப்படும். அலுவலகங்களில் சேகரமாகும் மக்கும் குப்பைகள்- மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். வரும் காலத்தில் இந்த அலுவலகங்களில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டங்களும் அமைக்கப்படும்.
அரசு அலுவலகங்களில் தண்ணீா் சேமிப்பு, மின்சார சேமிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குப்பைகள் இல்லாத, கழிப்பறை சுகாதாரம் மிகுந்தவையாக அரசு அலுவலகங்கள் இருக்கும்.
இவற்றை முறையாகக் கடைபிடிக்கும் அரசு அலுவலகங்களுக்கு ஜன. 26-இல் நடைபெறும் விழாவில் பசுமைச் சான்று வழங்கப்படும். இதனை பசுமை ஆய்வுக்குழுக்கள் நேரில் ஆய்வு செய்து மதிப்பிட உள்ளன என்று தெரிவித்தாா்.