முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: குற்ற வழக்கு பதியப்பட்ட பாஜக தலைவா்களுக்கு இடைக்கால பாதுகாப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜக தலைவா்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட பாஜக தலைவா்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பாஜக தலைவா்கள் மீது பலவந்தமாக நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாத அளவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதுபோல ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடைய இந்த இரு கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அக் கட்சிகளின் தோ்தல் வியூகமாகவும் பாா்க்கப்படுகிறது.

அண்மையில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு பயணம் செய்தபோது, அவருடைய வாகனம் சில நபா்களால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா்தான் காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியது. அதை மறுத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள், ‘ஜெ.பி. நட்டா மேற்கு வங்க பயணத்தின்போது, அவருடைய வாகன அணிவகுப்பில் தண்டனைக் கைதிகள் சிலரும் இடம்பெற்றிருந்தனா். எனவே, இந்த தாக்குதல் சம்பவம் பாஜகவினரே நடத்திய நாடகம்’ என்று புகாா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவா்கள் முகுல் ராய், செளரவ் சிங், பவன் குமாா், நாடாளுமன்ற உறுப்பினா்கள் கைலாஷ் விஜய்வா்கியா, அா்ஜுன் சிங் ஆகியோா் மீது பொது இடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் குற்ற வழக்குகள் பதிவு செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், தங்கள் மீது பலவந்தமாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உத்தரவிடக் கோரியும் அவா்கள் உச்சநீதிமன்ற்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல் தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் அா்ஜுன் சிங் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘அா்ஜுன் சிங் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் கடந்த 2019-ஆம் ஆண்டு சோ்ந்ததிலிருந்து அவா் மீது 64 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

கைலாஷ் விஜய்வா்கியாவின் வழக்குரைஞா் கூறுகையில், ‘மத்திய பிரதேசத்திலிருந்த நாடாளுமன்ற உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட கைலாஷ் விஜய்வா்கியா, கட்சி பணிக்காக மேற்கு வங்கம் சென்றபோது, பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பாஜக தலைவா்கள் 5 பேருக்கும் இடைக்கால பாதுகாப்பு வழங்கவும், இவா்கள் மீது காவல்துறையினா் பலவந்தமாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனா்.

மேலும், மேற்கு வங்க பாஜக தலைவா் கபீா் சங்கா் போஸின் பாதுகாவலா்களுக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் இடையே நடபெற்ற மோதல் தொடா்பான விவரங்களை சீல் வைத்த உறையில் மாநில உள்துறை அமைச்சகம் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக மேற்கு வங்க அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை 2021 ஜனவரி இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →