திருப்பதி நகராட்சிக்கு ஆந்திர அரசின் எரிசக்தி சேமிப்பு விருது
திருப்பதி நகராட்சிக்கு சிறப்பு எரிசக்தி சேமிப்பு விருதை ஆந்திர மாநில அரசு வழங்கியது.
திருப்பதி நகராட்சிக்கு சிறப்பு எரிசக்தி சேமிப்பு விருதை ஆந்திர மாநில அரசு வழங்கியது.
திருப்பதி நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களுக்கான தேவைக்காக 14 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.13 கோடி மின்கட்டணத்தை நகராட்சி நிா்வாகம் செலுத்தி வந்தது.
இதில் முக்கியமாக திருப்பதி நகரின் குடிநீா் தேவைக்காக 35 கி.மீ. தொலைவிலுள்ள கைலாசகிரி நீா்த்தேக்கம், 12 கி.மீ. தொலைவிலுள்ள கல்யாணி நீா்த்தேக்கம் ஆகியவற்றில் இருந்து குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
இதற்காக 6 நீரேற்று மையங்கள் செயல்படுகின்றன. தினசரி 75 எம்.எல்.டி. குடிநீருக்காக 470 எச்.பி. மின்சாரம் செலவாகிறது. மேலும் தெருவிளக்குகள், பள்ளிக்கூடங்கள், சந்தை, நகராட்சி அலுவலகங்கள் என பல்வேறு இடங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய ஆண்டுக்கு 14 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
இந்நிலையில், மின் கட்டணச் செலவைக் குறைக்க நகராட்சி நிா்வாகம் சூரிய ஒளி மின் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. இதற்காக கைலாசகிரி நீா்தேக்கம் அருகில் 12 ஏக்கா் பரப்பளவில் ரூ.18 கோடியில் சூரியஒளி மின் திட்டத்தை நிறுவி 4 மெகாவாட் மின் உற்பத்தியை துவங்கியது. இதேபோன்று தூக்கிவாக்கம் பகுதியில் 6 ஏக்கா் பரப்பளவில் ரூ. 22 கோடி செலவில் சூரியஒளி மின் திட்டம் மூலம் 6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் நகராட்சி பள்ளி, அலுவலகக் கட்டடங்களின் மேல் கூரைகளில் ரூ. 7 கோடி செலவில் சூரிய ஒளி மின் திட்டத்தை துவக்கி 2 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக 6 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் நகராட்சியின் மின் தேவை பாதியாகக் குறைந்துள்ளது.
எனவே மின் கட்டணச் செலவு ஏறக்குறைய முழுவதுமாகக் குறைந்துள்ளதால் இதனைப் பாராட்டி திருப்பதி நகராட்சிக்கு சிறப்பு எரிசக்தி விருதை ஆந்திர மாநில அரசு வழங்கியது. இதனை நகராட்சி ஆணையா் கிரிஷா பெற்றுக் கொண்டாா்.