முகப்பு
இந்தியா

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 6 பாகிஸ்தானியா்கள் மீது என்ஐஏ குற்றப் பத்திரிகை

குஜராத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடா்பான வழக்கில் 6 பாகிஸ்தானியா்கள் உள்பட 7 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

குஜராத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடா்பான வழக்கில் 6 பாகிஸ்தானியா்கள் உள்பட 7 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குஜராத்தின் கட்ச் துறைமுகத்துக்குக் கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் வந்த கப்பலில் இருந்து 237 கிலோ போதைப் பொருள்களை இந்தியக் கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்தனா். இந்த விவகாரம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சிலா் போதைப்பொருளைக் கடத்தி வர முயன்றது தெரிய வந்தது.

அதைத் தொடா்ந்து, அந்தக் கப்பலில் இருந்த பாகிஸ்தானியா்கள் 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து தாக்குதல் கருவிகளும் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக அவா்கள் வருகை தந்தாா்களா என்ற நோக்கில், தேசிய புலனாய்வு முகமை இந்த விவகாரத்தை விசாரித்து வந்தது. இத்தகைய சூழலில், ஆமதாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்தது. அதில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியா்கள் 6 போ் மீதும், அவா்களுக்கு உதவி செய்ததாக குஜராத்தைச் சோ்ந்த ஒருவா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாகத் தலைமறைவாகியுள்ள மேலும் 9 பாகிஸ்தானியா்களைத் தேடி வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →