செம்மரக்கடத்தல்: தமிழக தொழிலாளிகள் 10 பேர் கைது
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்த தமிழகத்தை சேர்ந்த தொழிலாளிகள் 10 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்த தமிழகத்தை சேர்ந்த தொழிலாளிகள் 10 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ஆஞ்சநேயலு கூறியதாவது, 'திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் ரோந்து பணியை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பி கொண்டிருந்த போலீஸார், அரவிந்த கண் மருத்துவமனை அருகில் ஒரு கும்பல் கையில் பொருட்களுடன் வனத்திற்குள் நுழைவதை கண்டனர்.
அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் செம்மரம் வெட்ட வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த அத்தியாவசிய பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையின் போது தெரிய வந்தது.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன் இதேபோல் வடமாள்பேட்டை பகுதியில் செம்மரம் வெட்ட வந்த 25 தமிழக தொழிலாளிகளை கைது செய்ததாகவும், அவர்கள் தற்போது இம்மாதம் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளனர்’, என்று அவர் கூறினார்.