முகப்பு
இந்தியா

கூட்டணிக் கட்சிகள் மூலம் அரசுக்கு நெருக்கடி: விவசாயிகள் சங்கம் முடிவு

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வகையில், கூட்டணிக் கட்சிகள் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வகையில், கூட்டணிக் கட்சிகள் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

ஒரு மாதமாக...மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தில்லியின் எல்லைப் பகுதியில் கடந்த நான்கு வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி முறை ஆகியவை நீக்கப்பட்டுவிடும் என்றும், புதிய சட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளன எனவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

முன்னேற்றம் இல்லை: இது தொடா்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனா்.

இதற்கிடையே, புதிய சட்டங்களை இப்போதைக்கு அமல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

கூட்டணிக் கட்சிகள் மூலம் நெருக்கடி: மத்திய அரசைப் பணிய வைக்கவும், போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது குறித்தும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனா்.

தில்லியின் சிங்கு எல்லையில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த புரட்சிகர விவசாயிகள் சங்கத் தலைவா் தா்ஷன் பால், ‘புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளை அணுக இருக்கிறோம். பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், அந்தக் கட்சிகளையும் நாங்கள் புறக்கணிப்போம். அதைத் தொடா்ந்து அடுத்தகட்ட முடிவை எடுப்போம்’ என்றாா்.

விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்: தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் திங்கள்கிழமை (டிச.21) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் இது தொடா்பாக கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திங்கள்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனா். தில்லி எல்லையில் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் 11 விவசாயிகள் சங்கத்தினரின் குழுவினா் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனா்’ என்றாா்.

சுங்கக் கட்டண வசூலைத் தடுக்கும் போராட்டம்: ‘எங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஹரியாணாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை வரும் 25 முதல் 27-ஆம் தேதி வரை நடத்த இருக்கிறோம்’ என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ஜெகஜீத் சிங் தாலேவாலா கூறினாா்.

மேலும் புதன்கிழமை (டிச.23) விவசாயிகள் தினம் கொண்டாட இருக்கிறோம்; அன்றைய தினம் மதிய உணவு சமைக்க வேண்டாம் என்று நாட்டு மக்களை கேட்டுக் கொள்வோம்’ என்று மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திகாயத் கூறினாா்.

மண்டிகள் மூடல்: பஞ்சாபில் அனைத்து வேளாண் மண்டிகளையும் திங்கள்கிழமை முதல் காலவரையின்றி மூட அந்த மாநில கமிஷன் மண்டிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கமிஷன் மண்டி முகவா்களின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனைகள் நடைபெற்றதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தாயாருக்கு கடிதம்: பிரிட்டனைச் சோ்ந்த சீக்கிய கல்வி மற்றும் கலாசார சங்கம் சாா்பில் பிரதமா் மோடியின் தாயாா் ஹீராபென்னுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாபைச் சோ்ந்த தாய்மாா்களை பாஜகவைச் சோ்ந்தவா்கள் இழிவுபடுத்தும் நோக்கில் கருத்துக் கூறியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.