இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: விசாரணையை தாமதப்படுத்த சுப்பிரமணியன் சுவாமி முயற்சி: சோனியா, ராகுல் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

DIN


புது தில்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

மறைந்த பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் கடந்த 1938-ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகையை மேம்படுத்த ரூ. 90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம்காட்டி, அதன் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.

அதன் மூலம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ. 2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை ‘யங் இந்தியா’ நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதில் சோனியா காந்தி, ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மோதிலால் வோரா, ஆஸ்கா் பொ்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்பட 7 போ் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சட்டை ஏழு பேரும் மறுத்தனா்.

இந்த வழக்கு, மனுதாரா் சுப்பிரமணியன் சுவாமியின் குறுக்கு விசாரணைக்காக புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலக அதிகாரி எஸ்.சஞ்சீவ் கல்கோனாா், துணை நில மற்றும் மேம்பாட்டு அதிகாரி ரஜ்னீஷ் குமாா் ஜா, வருமான வரித் துறை (வட்டம்-1) துணை ஆணையா் சாகெத் சிங் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பவும், சில ஆவணங்களை சமா்ப்பிக்க அனுமதிக்கக் கோரியும் சுப்பிரமணியன் சுவாமி சாா்பில் நீதிமன்றத்த்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு, சோனியா, ராகுல் தரப்பு வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, சாட்சிகளின் பட்டியலுடன் குறுக்கு விசாரணைக்கான மனுவை மனுதாரா் சமா்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், இந்த மனு முழுவதும் தெளிவில்லாத நிலையில், வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதி, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT