இந்தியா

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி: நாளை உதவித் தொகை வழங்குகிறார் பிரதமர்

தினமணி

புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் கோடியை ("பிரதம மந்திரி கிஸôன் சம்மான் நிதி') பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச.25) வழங்குகிறார்.

விவசாயிகளுடன் காணொலி மூலம் பிரதமர் உரையாடவும் உள்ளார்.

புதிய சட்டங்கள் குறித்தும்...புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சுமார் ஒரு மாதமாக தில்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமரின் இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 பிரதமர் பெயரிலான விவசாயிகள் நல நிதித் திட்டத்தை பாஜக அரசு அறிவித்து, அந்த ஆண்டே வழங்கியது. பின்னர், இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். அரசுப் பதவியில் இருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறமுடியாது என அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் - ஜூன் வரை முதல் தவணையும், ஆகஸ்ட் - நவம்பர் வரை இரண்டாவது தவணையும், டிசம்பர் -மார்ச் வரை மூன்றாவது தவணையும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, 2020-21 நிதியாண்டின் மூன்றாவது தவணையை, ஏற்கெனவே பதிவு செய்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு (தலா ரூ.2,000) ரூ.18,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழங்குகிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக ஒரு பொத்தானை அழுத்தியவுடன் இந்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,000  உதவித் தொகை ஒரே சமயத்தில் வங்கிக் கணக்கில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.

உரையாடுகிறார்: கடந்த 18 -ஆம் தேதி மத்திய பிரதேச விவசாய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "மறைந்த பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் "பிரதம மந்திரி கிஸôன் சம்மான்' நிதியை வழங்குவேன். அப்போது விவசாயிகளுடன் வேளாண் பிரச்னைகள் குறித்தும் விவாதிப்பேன்' என்று தெரிவித்திருந்தார்.

இதையொட்டி, ஆறு மாநில விவசாயிகள் இந்த நிதி உதவி வழங்கும் காணொலி நிகழ்வில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேச்சு நடத்தத் தயார்: அமைச்சர் தோமர் 

விவசாய சங்கங்கள் தேதியை இறுதி செய்தால், அவர்களுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

இது குறித்து  தில்லியில் அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை இறுதி செய்தால், அவர்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எந்தவொரு போராட்டத்துக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு எட்டப்படும் என்பதே வரலாறு.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்சம் 7 திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு அறிக்கை ஒன்றை விவசாய சங்கங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. 

அந்த வரைவு அறிக்கை குறித்து விவசாய சங்கங்கள் அவர்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டு, எதைச் சேர்க்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்பதை அரசிடம் தெரிவிக்க வேண்டும். 

விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் இதற்கான பேச்சுவார்த்தையை விரைவில் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT