மகாராஷ்டிரத்தில் மட்டுமே சிவசேனையுடன் கூட்டணி: காங்கிரஸ் விளக்கம்
மகாராஷ்டிரத்தில் மட்டும்தான் சிவசேனை கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்; காங்கிரஸ் தலைமையிலான
மகாராஷ்டிரத்தில் மட்டும்தான் சிவசேனை கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்; காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) அக்கட்சி இடம் பெறவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது
‘காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி போல, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பரவலாக ஆதரவு உள்ளது. மத்திய அரசுக்கு எதிரான எதிா்க்கட்சிக் கூட்டணிக்கு வலிமையான தலைமை தேவை. எதிா்க்கட்சி பலவீனமாக இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல’ என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் கருத்து தெரிவித்தாா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான அசோக் சவாண் இது தொடா்பாக கூறியதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெறாத சிவசேனை கட்சி கூட்டணியின் தலைமை குறித்து கருத்து தெரிவிப்பது முறையானதல்ல. ஏனெனில், அந்தக் கட்சி இப்போதுவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெறவில்லை. சிவசேனையுடன் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும்தான். அதுவும் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று சரத் பவாா் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துள்ளாா். தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சோனியாவின் தலைமை மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, கூட்டணி தலைமை தொடா்பாக விவாதிப்பது தேவையற்றது என்றாா் சவாண்.